தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பெருநாழியைச் சேர்ந்த அரவிந்த் (28) என்பவர் டிரைவராக இருந்துவந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாலா என்ற பெண்ணை காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மாலாவின் தாய், தந்தைக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டமில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பெண்ணின் தாய் தந்தையர் தென்காசி மாவட்டம், கீழப்புலியூரைச் சார்ந்தவர்கள். பணி நிமித்தமாக சில ஆண்டுகளுக்கு முன்பு பெருநாழியில் செட்டிலாகியுள்ளனர். இதனிடையே அரவிந்த் மாலா தம்பதியருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த 3ம் தேதி அரவிந்த், வேலை தேடி தென்காசி மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன்குளம் செல்வதற்காக தென்காசி வந்துள்ளார். அதுவரை அவருடன் பேசிவந்த அவரது உறவினர்களால், 4ம் தேதி முதல் அரவிந்தைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்கள் தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.கற்பகராஜ் உள்ளிட்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
அதில், தென்காசி வந்த அரவிந்த் அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியதுடன் வேட்டைகாரன்குளத்திலுள்ள சிலருடன் சென்றது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், அரவிந்தின் செல் போன் எண்ணைத் தொடர்பு கொண்ட போலீசாருக்கு அது கேரளாவிலுள்ள ஒரு நகரின் டவர் லைனைக் காட்டியிருக்கிறது. இதில் குழம்பிப்போன போலீசார், விசாரணையில் தீவிரம் காட்டினர்.
அந்த விசாரணையில், வேட்டைக்காரன்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், அரவிந்துடன் நட்பாகி பின்னர், அவருக்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, தனது நண்பர்களான கீழப்புலியூரின் சீத்தாராமன், பொன்னரசு, அருணாசலம் தம்பிரான் ஆகியோருடன் சேர்ந்து பட்டக்குறிச்சியை அடுத்துள்ள கல்குவாரிக்கு அரவிந்தைக் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அரவிந்தைக் குத்திக் கொலை செய்து, உடலில் கல்லைக் கட்டி அங்குள்ள குளத்தில் வீசி விட்டுச் சென்றது தெரியவந்தது.
போலீஸார் தங்களை நெருங்குவதை அறிந்த கொலையாளிகளான மணிகண்டனும், சீதாராமனும் சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கின்றனர். பின்னர் பொன்னரசு மற்றும் தம்பிரான் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், அரவிந்தைக் கொலை செய்து அவரது செல்போனை பாபனாசம் சினிமா பாணியில் கேரளா செல்லும் லாரியில் வீசியதும் இந்தக் கொலையில் தாங்கள் அல்லக்கைகள் தான். மேலும் பலருக்குத் தொடர்பிருப்பது பற்றியும் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அரவிந்தின் மாமியாரான விளாத்திகுளம் ராஜேந்திரனின் மனைவி ராணி (43), கீழப்புலியூரின் வசந்த் (20) இருவரையும் கைது செய்த போலீசார், 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.
அன்த பிறகே இக்கொலையின் ட்விஸ்ட் விடுபட்டுள்ளது. அரவிந்தின் மாமியார் ராணிக்கு தன் மகளின் காதல் திருமணத்தில் விருப்பமில்லை. எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் 2 வயதில் பெண்பிள்ளையும் என்றான பிறகும் அரவிந்தன் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி தன் மகளுடன் தகராறு செய்து அவளைத் துன்புறுத்தியிருக்கிறார். இதனை தனது கிராமமான கீழப்புலியூரிலிருந்து தன்னை அடிக்கடி பார்க்க வரும் தனது பேரன் உறவு முறை கொண்ட வசந்திடம் அடிக்கடி ராணி கூறியுள்ளதைத் தொடர்ந்தே வசந்த், தன்னுடைய ஏற்பாட்டில் மணிகண்டனின் தலைமையிலான கூலிப்படையை ஏவியதுடன் அவர்களுக்கான பணமும் அவரே கொடுத்ததாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.