Skip to main content

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மரணம்..! 

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

 youth passes away after being Corona vaccinated

 

இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுபடுத்த இந்தியாவின் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக உள்ளதால், கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

 

அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கும் அமலில் உள்ளது. அதேவேளையில் பொதுமக்களின் அசாதாரண போக்கால் ஆங்காங்கே மாநகராட்சி சார்பிலும், காவல்துறையின் சார்பிலும்  கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கரோனா கட்டுபாட்டின் ஒரு பகுதியாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களும்  தடுப்பூசி  செலுத்திகொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் தெரிவித்தவர்களுக்கு, நிறுவனத்தின் சார்பில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்து வருகின்றனர். அதே சமயம் வருகிற மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ‘கோவின்’ என்ற இணையதளத்தில் பதிவுசெய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், கடலூரைச் சேர்ந்த 25 வயதான சிவப்பிரகாஷ், கடலூர் சிப்காட்டில்  உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சிறு வயதில் இருந்தே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர், நேற்று முன்தினம் (24.04.2021) தான் வேலை செய்த நிறுவனத்தின் மூலம் முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின்னர் முழு ஊரடங்கான நேற்று, வீட்டில் இருந்த சிவப்பிரகாஷ்க்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது.

 

உடனே அவரை சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,  அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மறுநாளே இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்