கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள உளுந்தாண்டார் கோவில் பகுதியில் வசித்துவந்தவர் பிரபு(34). இவர், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வரும் தற்காலிக ஊழியர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, பிரபு தண்ணீர் விநியோகிக்கும் பணியில் இருந்த போது மாலை நேரத்தில் அவருக்கு பசி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக விருத்தாசலம் சாலையில் உள்ள ஒரு சாலையோர சிற்றுண்டி கடைக்குச் சென்று இரண்டு போண்டா ஒரு டீ சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்டு சில மணி நேரத்தில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் பிரபுவை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் மரணத்திற்கு காரணம் தரமற்ற உணவை சாப்பிட்டதுதான் என அவரது உறவினர்கள் புகார் கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் சுகாதாரத்தை அதிகாரிகள் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டல் பகுதிகளில், உரிய ஆய்வு நடத்தி தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையோர டிபன் கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பின் கோரிக்கை வைத்துள்ளனர்.