கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள செங்கமேடு மாரியம்மன் கோவில் மற்றும் ஆ.பாளையம், வாகையூர், சித்தூர், மேல் ஆதனூர், கல்லூர், ஆவட்டி, ஆகிய கிராமங்களில் உள்ள மாரியம்மன், அய்யனார், கருப்பையா ஆகிய கோயில்களில் ஒரே இரவில் கோயில்களில் பூட்டப்பட்டிருந்த இரும்பு கேட்டை உடைத்து கொள்ளை நடந்தது. மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், சில்லரை மற்றும் பக்தர்கள் அளித்த காணிக்கை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இது சம்பந்தமாக ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் ஆவினங்குடி போலீசார் நேற்று போக்குவரத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் அவர் பெண்ணாடம் சோழன் நகரைச் சேர்ந்த 26 வயது சூரியமூர்த்தி என்பது தெரியவந்தது. இவர் மேற்படி கோவில்களில் உண்டியல் உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
குற்றத்தை சூரியமூர்த்தி ஒப்புக் கொண்டதையடுத்து சூரியமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்ட கோவில் உண்டியல் உடைத்த சம்பவத்தில் சூரியமூர்த்தி மட்டும் சம்பந்தப்பட்டுள்ளாரா வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. கோயில் உண்டியல் கொள்ளையில் வாலிபர் கைது செய்யப்பட்டிருப்பது திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.