
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு வழியாக ஒடிஷா மாநிலத்திலிருந்து கேரளா மாநிலம் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வாலிபர் ஒருவர் கஞ்சா கடத்தி வருவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரயிலில் சோதனை நடத்தினர்.
அந்தச் சோதனையின் போது, கழிவறையில் பதுங்கியிருந்த ஒரு இளைஞரை பிடித்து ஜோலார்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த முஸ்தபா மகன் ஷாகுல்ஹமீத் (21) என்பதும், இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
அப்படி வேலை தேடி அலையும் இளைஞரிடம், கஞ்சா கடத்தல் கும்பல் ஆசை வார்த்தைகள் கூறி அவர்கள் பேச்சில் மயங்க வைத்துள்ளனர். ஆசை வார்த்தைக்கு மயங்கிய ஷாகுல்ஹமீத், கஞ்சா கடத்தி வரத் துவங்கியுள்ளார். வெற்றிகரமாக ஒருமுறை வடமாநிலத்திலிருந்து கடத்தி வந்த 5000 ரூபாய் கூலியாகத் தரப்படுவதாகக் கூறியுள்ளார். பின்னர் கஞ்சா கடத்திய இளைஞரை கைது செய்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், அவரை ராணிப்பேட்டை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.