பிரபல பின்னணி பாடகரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கல்லூரி நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென மேடையை விட்டு வெளியேறினார். அங்கு இருந்து, தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்படவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கிருஷ்ணகுமாரின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.
1997-ஆம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் இடம்பெற்ற 'ஸ்ட்ராபெரி கண்ணே' பாடல் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இவரது மறைவு இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அமித்ஷா, ராகுல் காந்தி, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தள பக்கத்தில் மூலமாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக ட்வீட் போட்டுள்ள நடிகர் சூர்யா, " உங்களின் குரல் எங்களின் இதயங்களில் எப்போதும் நிறைந்திருக்கும்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.