தேர்தல் பணிகளில் திமுகவைப் போலத் தீவிரக் கவனம் செலுத்துகிறது தமிழக இளைஞர் காங்கிரஸ். குறிப்பாக தென் மாவட்டங்களில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில், ஏரல் நகர் பகுதியின் காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் பேசிய ஊர்வசி அமிர்தராஜ், தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான அதிமுக சண்முகநாதனை வறுத்து எடுத்திருக்கிறார்.
தேர்தல் பணி குறித்து விரிவாகப் பேசிய அவர், "தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் மாநிலத்தில் எந்த வளர்ச்சிப்பணிகளும் நடைபெறவில்லை. ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. (சண்முகநாதன்), பேருந்திலிருந்து எகிறி குதித்து ஓடிவந்து தான் ஃபேமஸ் ஆனார். இதைத் தவிர தொகுதி மக்களுக்கு இந்த 5 வருடத்தில் ஒன்றும் செய்யவில்லை.
அதிமுக அரசானது பாஜகவிற்கு அடிமையாகி நமது மாநிலத்தையே அடிமை மாநிலம் என்ற ரீதியில் மாற்றிவிட்டது. இந்தச் சட்டமன்றத் தேர்தலின் மூலமாக மாற்றம் வரவேண்டும். அதற்கேற்ப தொகுதி மக்களிடம் நீங்கள் நெருங்கிச் செல்லவேண்டும்" என அறிவுறுத்தினார். மேலும், தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் ஊர்வசி அமிர்தராஜ்.