காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம்(4.8.2022) முதல் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வழியாக வங்க கடலில் கலக்கிறது. இதனால் கொள்ளிடம் கரையோர கிராமங்களில் தண்ணீர் உட்புகுந்துள்ளது. கொள்ளிடத்தை அடுத்த நாதல்படுகை கிராமம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களை படகுகள் மூலம் மீட்டு பத்திரமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் அப்பகுதி இளைஞர்கள் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் குளித்து விளையாடி ஆட்டம் போட்டு வருகின்றனர். அப்பகுதியில் காவல்துறையினர் யாரும் பாதுகாப்பு பணியில் இல்லாததால் இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. "விபரீதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் போதிய காவலர்களை அமர்த்தி தண்ணீரில் இறங்கும் நபர்களை எச்சரிக்க வேண்டும்," என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.