Skip to main content

“இது என்ன சார் புதுப்பழக்கம்” - போலீசிடம் அட்ராசிட்டி செய்த இளம்பெண்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

young woman who argued with police while under influence alcohol

 

நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அழுது கொண்டிருந்த இளம்பெண்ணை நெருங்கிச் சென்று விசாரித்த போக்குவரத்து காவலர்களுக்கு அந்தப் பெண்ணே தலைவலியான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

சென்னை சைதாப்பேட்டை அருகே போக்குவரத்து போலீசார் இரவு நேர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்திருந்த இளம்பெண் ஒருவர், ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஓவென்று அழுதுகொண்டு இருந்துள்ளார். இதைக் கவனித்த போலீசார், ‘யாருயா அந்த பொண்ணு.. இந்த ராத்திரில ஏன் இங்க வந்து உட்காந்து அழுதுட்டு இருக்கு..’ என அந்தப் பெண்ணின் அருகில் சென்றுள்ளனர்.

 

மெதுவாகச் சென்று அந்தப் பெண்ணிடம் நடந்ததை விசாரித்துள்ளனர். அந்தப் பெண் பேச முடியாமல் திணறியுள்ளார். உடனடியாக சுதாரித்த போலீசார், ‘இந்தப் பெண்ணை இப்படியே ஸ்கூட்டியில் செல்ல அனுமதித்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படக்கூடும்’ என நினைத்து, அந்தப் பெண்ணிடம் மதுப்பரிசோதனை கருவியில் ஊதுமாறு கூறியுள்ளனர். ஆனால், அதற்கு அந்தப் பெண் மறுத்துள்ளார். ‘சரிம்மா... நீ ஊது.. நாங்க பைன் எல்லாம் போடமாட்டோம்’ என மெதுவாக எடுத்துக் கூறியுள்ளனர். அவரும் ஊதியுள்ளார்.. மதுப்பரிசோதனை கருவி வெடிக்காதது தான் ஆச்சரியம்! அவ்வளவு போதையில் இருந்துள்ளார் அந்த இளம்பெண்.

 

மூச்சுமுட்ட குடித்துவிட்டு முழுபோதையில் அந்த இளம்பெண் இருப்பதை அப்போதுதான் போலீசாரே உணர்ந்துள்ளனர். இதையடுத்து, ‘ஸ்கூட்டியை இங்கேயே விட்டுட்டு வீட்டுக்கு போம்மா.. நாளைக்கு வந்து எடுத்துக்கலாம்..’ என அறிவுரை கூறியுள்ளனர். மேலும், அவருக்கு ஃபைன் போட்டுள்ளனர். அந்த பில்லை வாங்கி பார்த்ததும் கோவமடைந்த இளம்பெண் போக்குவரத்து போலீசாரிடம், “இப்ப எதுக்கு ஃபைன் போட்டீங்க. என்கிட்ட காசு இல்லை. ஃபைன்லாம் கட்டமுடியாது. தினமும் குடிச்சிட்டுத்தான் போறேன். அப்போல்லாம் பிடிக்கல. இப்போ மட்டும் ஏன் ஃபைன் போடுறீங்க?” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், “நானே ஓசிலதான் குடிச்சிட்டு வரேன். என்னால் எப்படி ஃபைன் கட்டமுடியும்?” எனக் கூறி ஆவேசத்துடன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கடைசியில், போலீசார் அந்த இளம்பெண்ணின் வாகனத்தைப் பறிமுதல் செய்ததுடன், அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். போக்குவரத்து போலீசாருடன் இளம்பெண் நள்ளிரவில் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்