Skip to main content

இளம்பெண் கொலை; வட மாநிலத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்த வலியுறுத்தல் 

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

young woman nithya incident in namakkal jedarpalayam 

 

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள காரபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 35). விவசாய கூலி வேலை செய்து வரும் இவருக்கு நித்யா (வயது 27) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். வழக்கம் போல் நித்யா தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஓடை பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். மாலை வேளையில் ஆடுகள் மட்டும் வீடு திரும்பிய நிலையில், ஓட்டி சென்ற நித்யா வீடு திரும்பவில்லை.

 

இதனால் சந்தேகமடைந்த விவேகானந்தன், வழக்கமாக ஆடுகளை நித்யா மேய்த்து வரும் பகுதிக்குச் சென்று தேடியுள்ளார். அப்போது அங்கு உள்ள ஓடைப் பகுதியில் நித்யாவின் ஆடைகள் கிழிந்த நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவேகானந்தன் இதுகுறித்த தகவலை ஜேடர்பாளையம் போலீசாருக்கு உடனடியாக தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நித்யாவின் உடலைக் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

நித்யாவின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நித்யாவின் உறவினர்கள் நாமக்கல் மோகனூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள், காரபாளையம் பகுதியில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், "தினமும் ஆடு மேய்க்க வரும் நித்யாவை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நித்யாவிடம் இருக்கும் நகைகளைப் பறிக்க கொலை செய்து இருக்கலாம்" என்று தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்