ஆந்திர மாநிலம் ஏலூரைச் சேர்ந்த இளம் பெண் ஜாகுலர் ரத்னா கிரேஸ்(22). இவருடன் பள்ளியில் துவங்கி, கல்லூரி வரை ஒன்றாக படித்த வாலிபன் ஏசு ரத்தினம்(23). இரண்டு பேரும் நண்பர்களாக இருந்த நிலையில், இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் காதலித்து வந்த நிலையில், அந்த காதலை விரும்பாத ரத்னா கிரேஸ் பெற்றோர், தங்களுடைய மகளுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் செய்ய முடிவுசெய்து நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை(30.5.2022) இரண்டு பேரும் ஏலூரில் நேருக்கு நேர் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது இயேசு ரத்தினம், தான் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த.. கத்தியை எடுத்து ரத்னா கிரேஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், அவருடைய கழுத்துப் பகுதி பலத்த பாதிப்படைந்துள்ளது. மேலும், ஏசு ரத்தினம் தன்னுடைய கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் இரண்டு பேரும் சரிந்து விழுவதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனால், அதற்குள் ரத்னா கிரேஸ் இறந்துவிட்டார். மறுபுறம் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறிய காரணத்தால், மயக்கம் அடைந்த ஏசு ரத்தினம் தற்போது ஏலூரூ அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம், ஏலூர் டவுன் சத்திரம்பாடு பகுதியில் உள்ள லட்சுமி கணபதி கோவிலில் மதியம் 12.30 மணியளவில் நடந்துள்ளது.
மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெரும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏசு ரத்தினம் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏசு ரத்தினம் தற்போது போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் சிகிச்சை பெறுவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், இருவரும் பள்ளிக்காலத்தில் இருந்து நண்பர்கள். கல்லூரியிலும் இவர்களது நட்பு தொடர்ந்துள்ளது. இதனால், இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், ஒரு கட்டத்தில் ஏசு ரத்தினம் வேலைவெட்டிக்கு செல்லாமல் பொழுதைக் கழிப்பதை காதலி ரத்னா கிரேஸ் விரும்பவில்லை. இதனால், இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் வந்துள்ளது. ஒருகட்டத்தில் இந்த காதல் வேண்டாம் எனும் முடிவுக்கு வந்துள்ளார் கிரேஸ். இதையடுத்து.. கிரேசுக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதைத் தெரிந்துகொண்ட ஏசு ரத்தினம் கிரேஸ் வேலை பார்க்கும் பள்ளிக்கு வியாழக்கிழமை சென்ற ஏசு ரத்தினம்.. அங்குள்ள லட்சுமி கணபதி கோவிலுக்கு அழைத்து பேசியுள்ளார்.
அப்போது நீதான் எனக்கு முக்கியம், நீ இல்லாமல் என்னால் வாழ்வதை கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை என புலம்பியுள்ளார். மேலும், நான் கையில் பொருள் வைத்துள்ளேன். இங்கேயே என் கதையயை முடித்துக் கொள்வேன். நீ வேண்டாம் என சொன்னால் இதுதான் அடுத்து நடக்கும் எனக் கூறியுள்ளார். அப்போதும் கிரேஸ் பிடிகொடுக்காமல் பேச, இந்தா நீயே என்ன கொன்னுடு என கத்தியை கொடுத்துள்ளார். என்ன காமெடி பண்ணுறியா என கிரேஸ் கேட்டுக் கொண்டிருக்கும்போதே கையில் இருந்த கத்தியை எடுத்து அவரையும் தன்னையும் அறுத்திருக்கிறார் ஏசு ரத்தினம்" என்கிறார் அந்த போலீஸ் அதிகாரி.
ஒரு பெண் காதலை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அல்லது பிரேக்கப் செய்துகொள்வோம் என்றால், அதை ஏற்றுக் கொள்ளாமல், எனக்கு இல்லாத நீ யாருக்கும் இல்லை எனும் ஆணாதிக்க மனோநிலை பெண்கள் சமூகத்தை இன்றும் அச்சுறுத்துவது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது என பெண்ணுரிமை போராளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்