நஞ்சில்லா உணவு, இயற்கை விவசாயம் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தியதோடு நின்றுவிடாமல் மக்களை நேரடியாகச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், தனது இறுதி நாட்களில் கூட, டெல்டா மாவட்டங்களில் மண்ணை மலடாக்கும் திட்டமான மீத்தேன் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இரவில் பட்டுக்கோட்டையில் தங்கியிருந்த இடத்திலேயே இயற்கை எய்தினார், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் .
இன்று (30.12.2020) அவரது ஏழாவது நினைவு தினத்தை தமிழகத்தில் பலரும் அனுசரித்துவரும் நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பனங்குளம், சேந்தன்குடி மற்றும் பல்வேறு கிராமங்களில் நாம் தமிழர் கட்சியினர் மரக்கன்றுகளை நட்டு கட்சிக் கொடி ஏற்றினார்கள்.
அதேபோல நம்மாழ்வாருடன் இணைந்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த சேந்தன்குடி 'மரம்' தங்கசாமி குடும்பத்தினர் சார்பாக, மாணவர்கள், பஸ் பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. கொத்தமங்கலத்தில் இளைஞர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நட்டு நினைவு தினத்தை அனுசரித்தனர். இதேபோல புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டம் முழுவதும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.