கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது செங்கமேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் 85 வயது மூதாட்டி தனக்கோடி. இவர் தனது மகளின் ஊரான காருக்குறிச்சியில் இருந்து சொந்த ஊருக்கு நேற்று காலை பஸ்ஸில் வந்ததார். ஆவினங்குடி பஸ் நிறுத்தத்திலிருந்து அவரது ஊரான செங்கமேடு செல்வதற்கு மூன்று கிலோமீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும், பஸ் போக்குவரத்து இல்லை. அதனால் எப்படி நடந்து செல்வது என்று தனக்கோடி யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது டிப்டாப்பான இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து மூதாட்டி தனக்கோடி அருகில் நிறுத்தினான்.
நீங்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று கேட்க செங்கமேடு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். நானும் அங்குதான் செல்கிறேன் எனது வாகனத்தில் ஏறி உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று மூதாட்டியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது மூதாட்டி வைத்திருந்த கைப்பையை வாங்கி அவரது வாகனத்தின் முன் பகுதியில் மாட்டியிருந்தார். அந்த கைப்பையில் சுமார் ஒன்றரை பவுனில் தங்கத்திலான தோடு மாட்டல் ஒன்று இருந்துள்ளது. வாகனம் சென்று கொண்டிருக்கும் போதே மூதாட்டியின் கைப்பைக்குள் வைக்கப்பட்டிருந்த இருந்த அந்த டப்பாவை லாவகமாக எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துள்ளான் அந்த டிப்டாப் இளைஞன். ஊர் அருகே சென்றதும் பாட்டி இறங்கி கொள்ளுங்கள்நான் எனது வயலுக்கு செல்ல வேண்டும் என்று கூறி மூதாட்டி தனக்கோடியை இறக்கி விட்டு விட்டு வந்த வழியில் திரும்பி இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டான் அந்த இளைஞன்.
வீட்டுக்குச் சென்ற மூதாட்டி பையில் வைத்திருந்த டப்பாவினை எடுப்பதற்காக பைக்குள் கைவிட்டுள்ளார். அதில் வைக்கப்பட்டிருந்த டப்பா இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் தன்னை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்த இளைஞன் எடுத்துக்கொண்டது தெரிய வந்தது. உடனடியாக தனக்கோடி ஆவினன்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது மூதாட்டி தனக்கோடியை இளைஞன் ஒருவன் தனது இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த டிப்டாப் உடையில் வந்து நகை பறித்து சென்ற இளைஞனைத் தீவிரமாக தேடி வருகிறார்கள்.