கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்கள் தொழிலை மேம்படுத்திக் கொள்வதற்கான ஆடை, அணிகலன்கள், இசைக்கருவில் வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக 5,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொன்மை சிறப்புமிக்க கிராமிய கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில், இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வீதம் 500 கலைஞர்களுக்கும், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் 100 கலைக்குழுக்களுக்கும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
இந்த நிதியுதவியைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனிப்பட்ட கலைஞரின் வயது கடந்த மார்ச் 31- ஆம் தேதியில் 16 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
கலைக்குழுக்கள் தங்கள் குழுவைப் பதிவு செய்திருத்தல் வேண்டும். விண்ணப்பப் படிவங்களை இலவசமாகப் பெறலாம். தபால் மூலம் விண்ணப்பப் படிவம் பெற விரும்புவோர், சுய முகவரியிட்ட 10 ரூபாய்க்கான தபால்தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பி, பெற்றுக்கொள்ளலாம். தேவைப்படும் விண்ணப்பங்களை நகல் எடுத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, "உறுப்பினர் & செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 6000028," என்ற முகவரிக்கு வரும் ஜூன் 30- ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் அல்லது அதற்கு முன்னரோ அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரிலும் சமர்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பை சேலம் மாவட்டக் கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.