Skip to main content

காதல் என்ற பெயரில் சிறுமிகளை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர்…

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

cuddalore

 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்த 14வயது பெண் கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்தபோது முகவரி கேட்பது போல் வந்த வாலிபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் அந்தப் பெண் பிள்ளையை கடத்திச் சென்றதாகக் கூறி பெண்ணின் பெற்றோர் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது அவர்களிடம் புகார் அளித்தனர்.

 

வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மற்றும் சப் -இன்ஸ்பெக்டர்கள் வைத்தியநாதன் மாய சந்திரன் மற்றும் வேலாயுதம் ஆகியோர் கடத்திச் செல்லப்பட்ட  அந்த இளம் பெண்ணை தேடும் பணியில் தீவிரமாகக் களமிறங்கினர். இந்த நிலையில் அந்த வீட்டிற்கு வேலைக்கு வந்துசென்ற ஒரு வாலிபர் காதல் என்ற பெயரில் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

 

அந்த இளைஞனையும் இந்தப் பெண்ணையும் திட்டக்குடி அருகே போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அந்த இளைஞரிடம் விசாரணை செய்ததில் அவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் சந்தோஷ் குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும், இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயார் லதா உடன் வசித்துவருபவர் மினிசரக்கு வாகனம், நெல் அறுவடை இயந்திரம் ஆகியவற்றை இயக்குவது, சில நேரங்களில் வீடுகளுக்கு பெயிண்டிங் செய்வது போன்ற பணிகளைச் செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.

 

மேலும் கூலி வேலைக்கும் அவ்வப்போது சென்று வருவது அவரது வழக்கம். போலீசார் தீவிர விசாரணை செய்ததில் சந்தோஷ்குமார் ஏற்கனவே வேலைக்கு செல்லும் இடங்களில் சிறுவயதுப் பெண்களை ஆசை வார்த்தை கூறி காதல் என்ற பெயரில் கடத்திச் சென்று திருமணம் செய்வதும் பின்னர் அவர்களைத் துரத்தி விடுவதும் வழக்கமாகக் கொண்டு உள்ளது தெரியவந்தது.

 

அதன்படி ஏற்கனவே 16 வயது பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்து தொடர்பாக ஆண்டிமடம் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து லால்குடி அருகே அதே போன்ற ஒரு பெண்ணை காதல் என்ற பெயரால் ஏமாற்றி அவரை அழைத்துச் சென்று காவாலக்குடி அருகில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது பெண்ணை கடந்த 23 ஆம் தேதி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது.

 

Ad

 

இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இளம்பெண்களை, குறிப்பாக திருமண வயதுகூட ஆகாத பெண்களை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்று திருமணம் செய்வதும் அவர்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தி துரத்திவிட்டு, மீண்டும் வேலைக்குச் செல்லும் இடங்களில் இளவயது பெண்பிள்ளைகளுக்கு காதல்வலை விரிப்பதை சந்தோஷ்குமார் ஒரு பொழுதுபோக்காக செய்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் மீது வழக்குப் பதிவு செய்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சந்தோஷ் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இளம் பெண்களே காதல் என்ற பெயரில் இதுபோன்ற கயவர்களிடம் ஏமாறாதீர்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்