கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது கானூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் குணராஜ் (32). இவர் கடந்த 8ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் அவரது நண்பர் அமல்ராஜ் என்பவர் வீட்டிற்கு தூங்கச் சென்றுள்ளார். அந்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில், குணராஜ் மட்டும் படுத்துத் தூங்கியுள்ளார். அன்று நள்ளிரவு நேரத்தில் குணராஜ் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது குணராஜ் ரத்த காயங்களுடன் இருந்துள்ளார்.
அவரை மீட்ட அவரது உறவினர்கள் அருகில் உள்ள பாளையங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்தனர். பிறகு அங்கிருந்து சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அதனையடுத்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குணராஜ் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை ஆரோக்கியசாமி ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குணராஜ், அமல்ராஜ் வீட்டில் தனிமையில் படுத்திருந்தபோது அவரை யாராவது அடித்துக் கொலை செய்யும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குண ராஜின் பிரேதப் பரிசோதனை முடிவில் அவர் மீதான தாக்குதல் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவரும் என்றும் போலீசார் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வாலிபர் மர்மமான முறையில் பலியான சம்பவம் கானூர் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.