தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள வல்லக்குளம் அரியநாயகபுரத்தைச் சேர்ந்தவர் லதா. 46 வயதான இவர், கடந்த மாதம் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியோடு இணைந்த ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். ஆனால், லதாவுக்கு பணம் எடுக்கத் தெரியாத காரணத்தால், அவர் அருகில் இருந்த நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து, 5 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துத் தரச் சொல்லி உதவிக்கேட்டுள்ளார். அவரிடம் ஏடிஎம்மின் பின் நம்பரையும் நம்பி கூறியுள்ளார். லதாவுக்கு உதவ முன்வந்த வெளிர் நீல நிற சட்டை அணிந்திருந்த அந்த நபர், லதா கேட்ட பணத்தை சரியாக எடுத்து கொடுத்திருக்கிறார். அதை வாங்கிக் கொண்டு லதாவும் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், வீடு திரும்பிய லதாவிற்கு அடுத்த சில நாட்களாகத் தொடர்ந்து வங்கியிலிருந்து அடுத்தடுத்த மெசேஜ்கள் வந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த லதா வங்கியில் சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான், ஏடிஎம்மில் நடந்த மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. லதாவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.29 ஆயிரம் வரை அவ்வப்போது பணம் எடுத்தது தெரியவந்தது. வங்கி பணியாளர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த லதா, தாமதிக்காமல் பணம் நூதன முறையில் திருடப்பட்டது குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், லதா பணம் எடுத்த ஏடிஎம்மின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் லதாவுக்கு பணம் எடுத்துத் தருவதுபோல் நடித்து அவரின் ஏடிஎம் கார்டை கையில் எடுத்துக்கொண்டு, வேறொரு ஏடிம் கார்டை மாற்றிக் கொடுத்தது தெரிய வந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் தலைமையிலான போலீசார், அதில் உள்ள அடையாளம் தெரியாத நபரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.