தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் பருத்திக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்பிரகாஷ் வயது 21. இவர் தர்மபுரியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். திண்டிவனத்தைச் சேர்ந்த ஒரு பெண், கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் ஒரு நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். சமூக வலைதளம் மூலம் அருள்பிரகாஷுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளனர் இதனால் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்பட்டதையடுத்து காதலர்களாக வலம் வந்துள்ளனர். இப்படி பல இடங்களுக்கும் சென்று இருவரும் நெருக்கமாக இருக்கும்போது, அருள்பிரகாஷ் புகைப்படங்களை எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அருள்பிரகாஷ் ‘நான் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவச் செய்து, அவமானப்படுத்தி அசிங்கப்படுத்துவேன். அப்படி நடக்காமல் நிறுத்த வேண்டுமானால் எனக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் தர வேண்டும்’ என்று அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த திண்டிவனம் போலீசார், தர்மபுரி சென்று அருள்பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர்.
‘இளம் வயது பெண்கள் காதல் என்ற பெயரில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் பழகி புகைப்படம் எடுத்துக்கொள்வது, அவர்களை மீறி நெருக்கமாகப் பழகுவது போன்ற காரணத்தினால் அவர்களைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அருள்பிரகாஷ் போன்ற ஆண்கள் உங்கள் புகைப்படங்களை, வீடியோ காட்சிகளை வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்வது போன்ற சம்பவங்கள் ஒரு தொடர் சம்பவங்களாக நடந்துவருகின்றன அதனால் இளவயது பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.