திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி கரியன். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
கரியன் மகன் 35 வயதான சந்தோஷ் சென்னையில் கடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். தொழிலில் நட்டம் ஏற்பட்டதால் சென்னையில் இருந்து சொந்தவூர் வந்து செட்டிலாகியுள்ளார். தனது தந்தையிடம் தொழில் செய்ய பணம் கேட்டுள்ளார். அவர் தரமறுத்துள்ளார். இதனால் தந்தை - மகன் இருவருக்கும் ஆகஸ்ட் 24 ந்தேதி காலை சண்டை வந்துள்ளது. பணம் எதுவும் தரமுடியாது எனச்சொல்லிவிட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார் கரியன்.
அவர் சென்னை போய் 24 ந்தேதி மாலை 4 மணிக்கு இறங்கியதும் தண்டராம்பட்டில் உள்ள உறவினர்கள் கரியனுக்கு போன் செய்து உன் மகன், மருமகள் இருவரும் தற்கொலை செய்துக்கொண்டார்கள் என செல்போனில் தகவல் சொல்ல அதிர்ச்சியாகி உடனே அழுதபடி ஊர் திரும்பியுள்ளார்.
தற்கொலை செய்துக்கொண்ட சந்தோஷ் - அவரது மனைவி சுகன்யா தம்பதிக்கு இனியா என்கிற 3 வயது பெண் குழந்தையும், தமிழ் என்கிற ஒரு வயது ஆண் குழந்தை என இரு குழைந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இதற்கிடையே, தற்கொலை செய்துக்கொண்ட தம்பதிகள் தண்டராம்பட்டு எஸ்.பி.ஐ வங்கி கிளையில் டிராக்டர் கடன் பெற்று திரும்ப செலுத்த இயலாததால் வங்கியின் கெடுபிடி வசூல் நெருக்கடியால் அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்க்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்கள் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பு கூறுகிறது.
அதோடு, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடன் தலையிட்டு சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும். உயிரிழந்த இருவருக்கும் தலா ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதி வழங்குவதோடு இரு குழைந்தைகளையும் அரசே தனது பொறுப்பில் பாதுகாத்திடவும், தேசியமயமாக்கப்பட்ட, மற்றும் வணிக வங்கிகளின் சட்டவிரோத கடன் வசூல் நடவடிக்கையை தடுத்து நிறுத்திடவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் பெயரில் எங்கள் வங்கி கிளையில் எந்த கடனும் கிடையாது, கரியன் பெயரில் தான் ட்ராக்டர் கடன் உள்ளது, இந்த தற்கொலைக்கும் வங்கிக்கும் எந்த சம்மந்தமுமில்லை என அந்த வங்கி கிளை இதனை மறுக்கிறதாம்.
இது தண்டராம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.