சென்னை பெருநகர நகராட்சியில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் சென்னை மேயர் பிரியா மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை மேயர் பிரியா, ''முதல்வரின் ஆலோசனைப்படி பெருநகர சென்னை மாநகராட்சியில் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் 'மக்களைத் தேடி மேயர்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்திற்கு உட்பட்ட பகுதியில் மக்களைத் தேடி மேயர் என்ற திட்டம் இன்று அமைச்சர் சேகர்பாபு, துணை மேயர், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், மண்டல குழுத் தலைவர், நியமன குழுத் தலைவர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.
பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைப் பணிகள்; மழைநீர் வடிகால் பணிகள்; பூங்காக்கள் மேம்படுத்தும் பணிகள்; விளையாட்டுத் திடல்களை மேம்படுத்தும் பணிகள்; சாலையோரம் இருக்கக்கூடிய மின் விளக்கு சீரமைப்பு பணிகள்; பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள்; வரி செலுத்துதல் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகளை மக்கள் என்னிடம் நேரடியாக அளிக்கலாம். வைக்கப்படும் கோரிக்கைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காணப்படும்'' என்றார்.