கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலத்தைத் தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி, 'விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம்' சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் தமிழக முதல்வருக்கு தொடர் அஞ்சலட்டை அனுப்புவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 04-ஆம் தேதி விருத்தாசலம் தலைமை தபால் நிலையத்தின் முன்பு தமிழக முதல்வருக்கு அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக விருத்தாசலம் வட்டம் மங்கலம்பேட்டை அஞ்சலகத்தில் விருத்தாசலம் மாவட்டம் அமைக்க வலியுறுத்தி அஞ்சலட்டை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல் தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய விழிப்புணர்வு இயக்கத்தினர் தமிழக முதல்வருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கதிர்காமன், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்டீபன், மக்கள் நீதி மய்யம் நிர்வாகி வேங்கடகிருஷ்ணன், இந்திய குடியரசு கட்சி மாநில இணைப் பொதுச்செயலாளர் மங்காப்பிள்ளை, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.இக்பால், பா.ம.க நகர செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள், "கடந்த 20 வருடமாக விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருவதால், தமிழக அரசுக்கு நினைவூட்டும் வகையில் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தமிழக முதல்வருக்கு நூற்றுக்கணக்கான அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்கும் வரை தொடர்ச்சியாக பல கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது" என தெரிவித்தனர்.