மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி நகல் இயந்திரத்தை கொண்டுசென்றதாக திமுக கடும் எதிர்ப்பு.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலுக்கான வாக்குபதிவு நேற்றைய முன்தினம் நடைபெற்று வாக்குபதிவு செய்யப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு மதுரை மருத்துவகல்லூரி மருந்தகதுறை கட்டிடத்தில் அடுக்கிவைக்கப்பட்டது. நேற்றைய தினம் அந்த வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய அறைகள் அனைத்தும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்பாக பாதுகாப்புடன் சீலிடப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் மதுரை அரசு மருத்துவகல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நகல்(ஜெராக்ஸ்) இயந்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான எலெக்ட்ரானிக் உபகரணங்களை வாகனத்தின் மூலமாக அனுமதியின்றி உள்ளே கொண்டுசெல்லப்பட்டது. இதனை தடுத்து நிறுத்திய அமமுக முகவர்கள் மற்றும் திமுக முகவர்கள் அனுமதி கடிதம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலரை தொடர்பு கொண்டபோது ஆய்வுக்கூட்டத்தில் இருப்பதாக கூறியதையடுத்து திமுக வேட்பாளர் சரவணன் மற்றும் திமுகவினர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் சரவணன், "திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதியின்றி எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் கொண்டுசெல்லப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, ஏற்கனவே வடமாநிலங்களில் வாக்குபதிவு இயந்திரங்கள் மாற்றப்படும் நிலையில் தற்போது இது போன்ற நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” என்றார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மற்றும் மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார் திமுக வேட்பாளர்.
இது தொடர்பாக பேசிய மதுரை ஆட்சியர், பணியாளர்களுக்கு தேவையான பொருட்களை உரிய அனுமதியுடன் எடுத்து செல்வதில் எந்த முறைகேடும் இல்லை என்று கூறியுள்ளார்.