நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து தொழிற்சங்கத்தினரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட குவிந்தனர்.
சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.ஃஎப், எம்.எல்.ஃஎப், ஐ.என்.டி.யு.சி. உட்பட அனைத்து தொழிற்சங்கத்தினை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியலின் போது, வேளாண் சட்டங்களை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்தும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டது. மேலும் கரோனா காலத்தில் மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலை, கழக ஆலைகளை திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மறியலுக்காக நடந்துவந்த தொழிலாளர்களை காவல் துறையினர் தடுத்தபோது, போலீசாருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆவேசம் அடைந்த தொழிலாளர்கள் தடுப்புகளை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களைத் தடுக்க கம்பி முள்வேலி அமைத்த காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான பெண்கள் உட்பட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மறியல் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பரபரப்பான சூழல் நிலவியது.