நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி பல்வேறு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஐந்தாம் கட்டத் தேர்தல் மே 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று (18-05-24) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இதனையடுத்து, அடுத்தக்கட்டத் தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் ஒரே கட்டமாக மே 25ஆம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஹரியானா மாநிலம், சோனிபத் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “வலுவான அரசாங்கம் இருக்கும் போது, எதிரி எதையும் செய்வதற்கு முன் 100 முறை யோசிப்பார். பாகிஸ்தான் 70 ஆண்டுகளாக இந்தியாவைத் தொந்தரவு செய்து வந்தது. அதன் கைகளில் குண்டுகள் இருந்தன. இன்று, அதன் கைகளில் பிச்சைப் பாத்திரம் உள்ளது. வலுவான அரசு அமைந்தால் எதிரிகள் நடுங்குவார்கள். காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் முன்னேற வழிவகுத்த சட்டப்பிரிவு 370யை வீழ்த்தியது எனது வலுவான அரசுதான்.
ஒரு பலவீனமான அரசாங்கம் ஜம்மு காஷ்மீரில் நிலைமையை மாற்றியிருக்க முடியுமா?. தேசபக்தி ஹரியானாவின் நரம்புகளில் ஓடுகிறது. மேலும், தேச விரோத சக்திகளை ஹரியானா நன்கு அறியும். எனவே, ஹரியானாவில் ஒவ்வொரு வீடும் ‘மீண்டும் மோடி ஆட்சி’ என்று குரல் ஒலிக்கிறது. காங்கிரஸ் அரசு இருந்த அந்த நாட்களை நினைத்துப் பாருங்கள். பயங்கரவாதிகளால் வெடிக்கப்படும் அல்லது எதிர்ப்பாளர்களால் எறியப்பட்ட கல்லால் நமது வீரர்கள் காயப்படுவதைப் பற்றி எப்பொழுதும் கவலைப்படுவார்கள். இன்றோடு 10 வருடங்கள் ஆகிவிட்டன. இதெல்லாம் நின்றுவிட்டது” என்று பேசினார்.