தமிழ்நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெருநகரங்களில் மின்சாரம் வந்துவிட்டாலும் சிறு நகரங்கள் கிராமங்களில் மின்சாரத்தைக் கண்டு பயந்துள்ளனர். கை ஏற்று, கமலை ஏற்றில் தண்ணீர் இறைக்க வேண்டாம் மின்சாரத்தைப் பயன்படுத்தி மோட்டாரில் தண்ணீர் இறைக்கலாம் என்று சொன்ன போது மின்சாரம் வேண்டாம் என்று சொன்ன விவசாயிகள் ஏராளம். ஆனால் தற்போது மின்சாரம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலையில் உள்ளது.
இதே புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு (1970-72 காலம்) மின்சாரம் கொண்டு வர பேராவூரணி பக்கமிருந்து மின் பாதை அமைத்து கீரமங்கலத்திற்குள் மின்சாரம் கொண்டு வரப்பட்டு கடைவீதியாக இருந்த அக்னிபஜார் (அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி) அருகில் 250 கி.வா திறன் கொண்ட முதல் மின்மாற்றி அமைத்து கீரமங்கலம், செரியலூர், பனங்குளம் என சில கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது மின்மாற்றி தான் கீரமங்கலத்தின் முதல் மின்மாற்றி என்பதால் அதன் எண் :1 என்று எழுதப்பட்டுள்ளது. அதன் பிறகு மின் தேவைகளை புரிந்து கொண்ட மக்கள் மின்சாரம் பெற விண்ணப்பித்த நிலையில் அடுத்தடுத்து பல இடங்களிலும் புதிய மினமாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல மின் நுகர்வோர் கிராமங்களின் எண்ணிக்கையும் அதிகமானதால் துணைமின் நிலையமும் உருவாக்கப்பட்டது.
தற்போது கீரமங்கலத்தில் மட்டும் 47 மின்மாற்றிகளும் மேற்பனைக்காடு 49 மின்மாற்றிகள் என சுற்றியுள்ள மற்ற கிராமங்களிலும் என சுமார் 150க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தான் நேற்று கீரமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் இன்று கீரமங்கலத்தின் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து செயல்பாட்டில் உள்ள முதல் மின்மாற்றியான எஸ் எஸ் 1 ற்குச் சென்று மின்மாற்றிக்கு மாலை அணிவித்து வாழைக்கன்றுகள், வண்ண காகிதம் தென்னை ஓலை தோரணங்கள் கட்டி தேங்காய் உடைத்து பூஜை செய்து ஆயுத பூஜையை கொண்டாடினர்.
கீரமங்கலத்திற்கு மின் வெளிச்சம் கொடுத்த முதல் மின்மாற்றிக்கு மின் பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் மறவாமல் ஆயுத பூஜை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்கின்றனர் அந்த வார்டு கவுன்சிலர் சரவணன் உள்பட அப்பகுதி மக்கள். மேலும் இந்த மின் மாற்றி 50 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட அதே பெட்டி தான் இன்று வரை பழுதின்றி செயல்படுகிறது. ஆனால் இப்போது வைக்கப்படும் புது மின்மாற்றிகள் சில மாதங்கள் கூட தாக்குப்பிடிக்காமல் பழுதாகிவிடுகிறது. பல மின்மாற்றிகள் தீப்பற்றி எரிந்தும் உள்ளது. ஆனால் பழைய மின்மாற்றி இன்று வரை திடமாக உள்ளது பெருமையாக உள்ளது என்கின்றனர்.