விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் ஒன்றியத்துக்குட்பட்டது சின்ன நெற்குணம் எனும் ஊர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து உள்ளே செல்லும் சின்ன நெற்குணம் பகுதிக்கு மக்கள் அங்கே இருக்கும் ரயில்வே கேட்டை கடக்க வேண்டியதாக இருக்கிறது. இந்த இரயில் பாதையில் அடிக்கடி ரயில்கள் சென்று வருவதால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே ரயில்வே துறை அந்தப் பகுதியில் மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அக்கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.
மக்கள் கோரிக்கையை ஏற்ற ரயில்வே துறை அந்த இடத்தில் மேம்பாலத்திற்குப் பதிலாக சுரங்கப்பாதை கட்டுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான பணிகளும் துவங்கப்பட்டன. இதனை ஏற்றுக் கொள்ளாத அப்பகுதி கிராம மக்களும் விவசாயிகள் சங்கமும், சுரங்கப் பாதை மழைக் காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். தொடர்ந்து நீர் தேங்கி நின்றால் பிறகு சுரங்கப் பாதை பயன்படுத்தவே முடியாமல் பாழாகும். எனவே மேம்பாலம் வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 27 ஆம் தேதி அன்று சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்தனர்.
அவர்களிடம், திண்டிவனம் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் அடிப்படையில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியை ஆறு மாத காலம் ஒத்திவைப்பது என்று முடிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகள் சங்கமும், அக்கிராம மக்களும், உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலம் ரயில்வே துறைக்குப் பரிந்துரைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் சார்பில் ரயில்வே துறையின் மண்டல மேலாளரை சென்னை சென்று சந்தித்து மனு அளிப்பது என்றும் முடிவு செய்துள்ளனர்.