விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகில் உள்ளது ஏமப்பூர் கிராமம். இந்தக் கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பினர் தங்கள் அமைப்பு சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை வைத்து பராமரித்து வருகிறார்கள்.
மேலும், மகளிர் அமைப்பினர் சம்பந்தமான கூட்டங்கள் அங்கே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்தக் கட்டிடத்திற்குள் திடீரென்று புகுந்த சுகாதாரத் துறையினர் அங்கிருந்த ஆவணங்களை வெளியில் தூக்கிப் போட்டுவிட்டு, கட்டிடத்தை சுத்தம் செய்து வர்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணிகள் செய்ததாகவும், திறப்பு விழாவிற்காக வாழைமரம், தோரணம், கலர் பலூன்கள் எல்லாம் கட்டப்பட்டு தயார் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் மகளிர் அமைப்பினருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கு புறப்பட்டு கும்பலாக வந்த மகளிர் அமைப்பினர், சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது இங்கு மினி கிளினிக் திறப்பதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்று கூறியுள்ளனர். மேலும், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி தலைமையிலான குழுவினர் பரபரப்பாக செய்து கொண்டிருந்தனர். இதனை அறிந்த கிராம வறுமை ஒழிப்பு மகளிர் சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் அங்கே திரண்டு வந்தனர்.
எங்கள் அனுமதி இல்லாமல் கட்டிடத்திற்குள் சென்று ஆவணங்களை எல்லாம் வெளியில் எப்படி தூக்கி எறியலாம் என்று கண்டித்ததோடு அந்தக் கட்டிடத்தில் மினி கிளினிக் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மகளிர் அமைப்பினருக்கும் சுகாதாரத்துறை மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து, திருவெண்ணெய்நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், மகளிர் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு மினி கிளினிக் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
மருத்துவ குழுவினர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 2,000 கிராமங்களில் மினி கிளினிக் திறப்பதற்கு உத்தரவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதற்கான கட்டிடங்கள் கிராமப்புறங்களில் உள்ளதா என்பதைப் பற்றி ஆய்வு செய்யாமல் திடீரென்று எடுத்த இந்த முடிவால் பல்வேறு இடங்களில் மினி கிளினிக் திறப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.