Skip to main content

நான்கு மாத கர்ப்பிணிப் பெண் மரணம்; வரதட்சணை கொடுமையா? - ஆர்.டி.ஓ. விசாரணை

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

women incident in ambattur icf colony police and rdo investigation started 

 

நான்கு மாத கர்ப்பிணிப் பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெண்ணின் தாய் போலீசில் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

சென்னை சோழிங்கநல்லூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் தேவசகாயம் . இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகள் பிரதீபா (வயது 24). இவருக்கும், அம்பத்தூர் ஐசிஎப் காலனி பகுதியில் வசிக்கும் ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பிரதீபா நான்கு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

 

ஜேம்ஸ் வீட்டினர் தனக்கு வரதட்சணை கொடுமை செய்வதாகக் கூறி தனது தாய் வீட்டிற்கு பிரதீபா வந்துள்ளார். பின்னர் ஜேம்ஸ், பிரதீபா வீட்டிற்குச் சென்று தனது மனைவி பிரதீபாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், பிரதீபாவின் தாய்க்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட ஜேம்ஸ், குளியல் அறையில் பிரதீபா வழுக்கி விழுந்து விட்டதாகவும், அவரை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும் தகவல்  தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரதீபாவின் தாய் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது அங்கு பிரதீபா உயிரிழந்திருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

 

பிரதீபா குடும்பத்தினர் அம்பத்தூர் போலீசில் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி புகார் ஒன்றைக் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்து கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஜேமஸ்க்கும் ப்ரதீபாவுக்கும் திருமணம் நடைபெற்று ஏழு மாதங்களே ஆனதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருமணம் நடைபெற்று ஏழு மாதங்களே ஆன நிலையில் நான்கு மாத கர்ப்பிணிப் பெண் மரணமடைந்து இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்