திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் சார்பில் பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா பங்கேற்று அம்மையநாயக்கனூர், கொடை ரோடு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், ஆதரவற்றோர் என 500க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கினார்.
அதன் பின் பேசிய எஸ்.பி. ரவிளிப்பிரியா, “கிராமப்புறங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டிவருகிறார்கள். தடுப்பூசி குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை அதற்கு நானே ஒரு உதாரணமாக உங்கள் முன் நிற்கிறேன். எனக்கு குழந்தை பிறந்து 5 மாதங்கள்தான் ஆகின்றன. மருத்துவரின் ஆலோசனை பெற்று தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன். எனவே வயதானவர்கள், பெண்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், அம்மையநாயக்கனூர் வர்த்தகர் சங்கத் தலைவர் ராஜா பார்ட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் முடிவில் அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி நன்றி கூறினார்.