பூக்களின் நறுமணம் எல்லோருக்கும் பிடித்தமானவைதான். ஆனால், இப்போது அதன் விலையைக் கேட்டால், 'அப்படா அந்த வாசமே வேண்டாம்' எனத் தள்ளி நிற்கிறார்கள்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்வதற்கும் கோவில்களில் நடக்கும் சிறப்புப் பூஜைகளுக்கும் அதிகளவில் பூக்கள் வாங்குவார்கள். ஈரோடு மார்க்கெட்டில் கடந்த வாரம் வரை, பூக்கள் விலை குறைவாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென ஏறிவிட்டது. மேலும், வரத்துக் குறைவு என்ற காரணத்தினாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு பூ மார்க்கெட்டுகளில் ஜாதி மல்லி, முல்லைப் பூக்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
மல்லிப்பூ கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூபாய் 200 முதல் 250 வரை விற்பனையானது. இப்போது தீபாவளியை முன்னிட்டு 13ஆம் தேதி ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 1,400 முதல் 1,500 வரை விற்பனையாகிறது. இதைப்போலவே முல்லை பூ ஒரு கிலோ ரூபாய் 1,200 க்கு விற்பனையாகிறது. ஜாதிமல்லி பூ ரூபாய் 500-க்கும் ரோஜா பூ கிலோ ரூபாய். 400க்கும் விற்பனையாகிறது.
பூக்களின் கடுமையான விலையேற்றத்தால் ஒரு முழம் வாங்காவிட்டாலும் பரவாயில்லை அரை முழம் பூவாவது வேண்டும் என இல்லத்தரசிகளின் உத்தரவால் கடுமையான விலை கொடுக்கிறார்கள் குடும்பத் தலைவர்கள்.