ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுக்காடு பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஒரு சில குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் சுண்டல் வழங்குவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் மாதம் 1 கிலோ சுண்டல் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, இரண்டு பிரிவில் உள்ளவர்களுக்கு, அதாவது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சுண்டலும், சர்க்கரை கார்டு உள்ள மற்ற ஒரு பிரிவினருக்குத் துவரம் பருப்பும் வழங்கப்படும் என அறிவித்தது.
இது 1 -ஆம் தேதி முதல் 7 -ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால், அந்த இரண்டு பிரிவினருக்கும் கடந்த 5 மாதங்களாக சுண்டல் வழங்கப்படாததால், மொத்தமாக 5 கிலோ சுண்டல் தற்சமயம் வழங்கப்படுகிறது. இதில், பல குடும்ப அட்டைதாரர்களுக்கு சுண்டல் வழங்கப்படவில்லை. இதனால், சுண்டல் கிடைக்காத பெண்கள் அந்தியூர் புதுக்காடு செல்லும் சாலையில், உள்ள நியாய விலைக் கடைகளை முற்றுகையிட்டு, எங்களுக்கும் சுண்டல் வழங்க வேண்டும் நாங்களும் வறுமைக்கோட்டிற்குக் கீழ்தான் உள்ளோம். அரசு எங்கள் நிலையையும் கவனத்தில் கொண்டு உடனே சுண்டலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அனைவருக்கும் சுண்டல் கிடைக்கும் என அதிகாரிகள் உறுதி கொடுத்ததன் பிறகு, அவர்கள் கலைந்து சென்றனர். மக்கள் சத்தான உணவு சாப்பிட, சுண்டல் வழங்குவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.