விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின்போது முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை என, விழுப்புரம் மாவட்ட காவல்துறை அளித்த விளக்கத்தை ஏற்று, இயக்குனர் வ.கவுதமன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது அதிமுக மற்றும் திமுகவினர் கோடிக்கணக்கான ரூபாய் பணப் பட்டுவாடா செய்ததாக, தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், இயக்குனருமான வ.கவுதமன் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் அக்டோபர் 14-ஆம் தேதி புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர், காவல்துறை உதவியுடன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
கவுதமன் அளித்த புகாரில் சிஎஸ்ஆர் வழங்கப்பட்ட நிலையில், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் கவுதமன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுதமன் அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்டதாகவும், தேர்தல் பறக்கும் படையினரிடம் விளக்கம் பெற்றதாகவும், ஆனால் அந்தப் புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால், அதன் அடிப்படையில் புகாரை முடித்து வைத்துவிட்டதாகவும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்டோர் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி இயக்குனர் கவுதமன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.