இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற முடியாது என பாதுகாப்புத்துறை உயரதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ''மோடி அரசாங்கம் மேலும் ஒரு கொடிய செயலை இந்தியா மீது திணிக்கிறது. அதுதான் அவர்களது அக்னி பாதை திட்டம். ராணுவத்தில் நான்கு ஆண்டுகளுக்கு இளைஞர்களை சேர்த்து அதன்பிறகு அவர்கள் வெளியே சென்று விடுவார்கள். நான்கு ஆண்டுகளில் ஒரு இளைஞர் ராணுவத்தில் என்ன செய்திட முடியும். பாஜக இதற்கு முன்பு ஆர்எஸ்எஸ்-ஐ வைத்துக்கொண்டு ஒரு ராணுவத்தை நடத்தினார்கள். அவர்களது கையில் ஒரு குச்சிதான் கொடுத்தார்கள். இந்தமுறை அரசாங்கத்தின் பணத்தில், மக்களுடைய பணத்தில் அவர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்து ஆர்எஸ்எஸ்க்கு என்று ஒரு ராணுவப்படையை உருவாக்குகிறார்கள். இந்திய ஜனநாயகத்தில் மக்கள் வரிப்பணத்தை இப்படி செலவழிக்க உரிமை உண்டா இல்லையா என்பதுதான் கேள்வி.
நம்மிடம் ஏற்கனவே திறமை வாய்ந்த ராணுவம் இருக்கிறது. ராணுவ வீரர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறோம் என்ற திட்டமும் இருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டம் அது. இந்த அக்னிபத் திட்டத்தால் பாஜகவிற்கு நன்மைகள் இருக்கிறது. இரண்டாண்டுகள் கழித்து நடக்க இருக்கும் தேர்தலில் வாக்குச்சாவடியின் வெளியே ஆயுதம் தரித்த இளைஞர்கள் இருப்பார்கள். இந்த திட்டத்தை எதிர்த்து வரும் 27 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். நாட்டு மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் நாம் இதில் அமைதியாக இருக்கக்கூடாது. அமைதியாக இருக்கக்கூடாது என்றால் வன்முறையில் இறங்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஹிட்லர் இதைத்தான் ஜெர்மனியில் செய்தார். முசோலினி இத்தாலியில் செய்தார். அதேதான் இப்பொழுது இந்தியாவில் நடைபெறுகிறது'' என்றார்.