சமீபகாலமாக பகல் நேரத்தில் பல்வேறு வீடுகளுக்குச் சென்று சில பெண்கள் மின்சார கணக்கெடுக்க வந்ததாகவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்ய வந்ததாகவும் திருமண உதவி திட்டம் பற்றி விசாரிக்க வந்ததாகவும் கூறி, பகல் நேரத்தில் ஆண்கள் இல்லாத வீடுகளாக பார்த்து பெண்களிடம் விசாரிக்கும்போது அவர்களை திசை திருப்பி சாக்கு போக்கு சொல்லி அக்கம்பக்கத்தில் அலையவிட்டுவிட்டு வீட்டிலுள்ள நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து வருகிறார்கள்.
இரு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நொளம்பூர் கிராமத்தில் மணிவண்ணன் என்பவர் வீட்டில் இப்படி பட்டப்பகலில் புகுந்து திருடிய ஒரு பெண்ணை பொதுமக்கள் பிடித்து ஒலக்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் காவலர்கள் சத்யராஜ், ராஜசேகர், பார்த்திபன், செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டீம் இது பற்றி தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரைசேர்ந்த கல்பனா என்ற பெண்ணையும் சென்னை அருகே உள்ள பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 சவரன் திருட்டு நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ஏழு லட்ச ரூபாய் மேற்படி இரு பெண்கள் மீதும் சென்னை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 33 திருட்டு வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் திருடிவிட்டு சிறைக்கு அனுப்பப்பட்டும் ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் திருட்டு தொழிலை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பெண்கள் என்பதால் கிராமப்புறங்களில் உள்ள பெண்களிடம் இப்படிப்பட்டவர்கள் சகஜமாக பேசி அவர்களை திசை திருப்பி வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்கள், பணம், நகை ஆகியவற்றை தொடர்ந்து கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் போன்ற பல பெண்கள் மேற்படி மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் விசாரணை என்ற பெயரில் வரும் பெண்களை நம்ப கூடாது அவர்கள் பற்றி சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.