பட்டியலின பெண் ஒருவர் அழுத்தம் காரணமாக ஊராட்சி துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோபியா நவீன்குமார். பட்டியலின பெண்ணான இவரை துணைத்தலைவராகப் பதவியேற்றதிலிருந்தே சிலர் பதவி விலக வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சோபியா நவீன்குமார், ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தான் பட்டியலின பெண் என்பதால் 9வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ஆகியோர் தன்னை பதவி விலக வற்புறுத்தியதாக அப்பெண் குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.
ஊராட்சிமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத்தவர்களைத் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்காதது, தரையில் அமரவைப்பது உள்ளிட்ட செயல்கள் வன்மையான கண்டனங்களைப் பெற்ற நிலையில், வற்புறுத்தல் காரணமாகப் பட்டியலின பெண் ஒருவர் பதவியை இழந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.