
ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி 50 பயணிகளுடன் கோவை போக்குவரத்து கழக பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அதில், கரூர் பேருந்து நிலையத்தில் நடுத்தர வயதான ஒரு பெண் ஏறியுள்ளார்.
பேருந்தில் ஏறிய பெண், பேருந்திற்குள்ளேயே தகாத வார்த்தைகளால் பேசி பெரும் கலாட்டாவில் ஈடுபட்டுவந்துள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பெண் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். அவரை அமைதியாக இருக்குமாறு கூறிய ஆண் பயணிகளையும் தகாத வார்த்தைகளால் கடுமையாகப் பேசினார்.
அதனால் பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். பேருந்து செல்லச் செல்ல அந்தப் பெண் மது அருந்தியது தெரியவந்த நிலையில், சக பயணிகளும் ஓட்டுநரும் நடத்துநரும் அச்சமடைந்த நிலையில், மேலும் குடிபோதையில் பெண்ணின் ஆக்ரோஷம் அதிகரித்தது. அதனால் வேறுவழியின்றி வேடசந்தூர் வந்த பேருந்தை காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி ஓட்டுநர் காவல் நிலையத்திற்குப் பேருந்தை இயக்கினார். அங்கு பேருந்திலிருந்த பெண்ணைக் காவல்துறையினரிடம் பயணிகள் ஒப்படைத்தனர். காவல்துறை முன்பாகவே பெண் தகாத வார்த்தைகளால் பேசி கலாட்டா செய்ததால் காவல் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. காவல்துறையினர் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று அவர் யார் என்பது குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.