கிருஷ்ணகிரி அருகே, சபல புத்தியால் கணவரையே கூலிப்படையை ஏவி விட்டு அடித்துக் கொலை செய்த பெண் எஸ்ஐயை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). காவல்துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சித்ரா (44) சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் எஸ்ஐ ஆக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜெகதீஸ்குமார் (19) என்ற மகன் இருக்கிறார். இவர்கள் மூன்று பேரும் ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், செந்தில்குமார் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி திடீரென்று மாயமாகி விட்டார். இதுகுறித்து செந்தில்குமாரின் தாயார் பாக்கியம் கல்லாவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் முதற்கட்டமாக செந்தில்குமாரின் கார் ஓட்டுநர் கமல்ராஜ் (37), மகன் ஜெகதீஸ்குமார் ஆகியோரிடம் விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, டிசம்பர் 13 ஆம் தேதி இருவரையும் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்தனர். ஆனால், அன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேநேரம், டிசம்பர் 14 ஆம் தேதி இருவரும் கிருஷ்ணகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் ஸ்ரீவத்சவா முன்பு ஆஜராகினர். செந்தில்குமாரை கொலை செய்து தென்பெண்ணை ஆற்றில் வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து, அவர்களைக் கைது செய்த காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இது ஒருபுறம் இருக்க, ஊத்தங்கரை டிஎஸ்பி அமலா எட்வின், செந்தில்குமாரின் மனைவி சித்ரா ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, டிசம்பர் 23 ஆம் தேதி உள்ளூரில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் செந்தில்குமாரின் சடலம் மீட்கப்பட்டது. அந்த இடத்திலேயே சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் கமல்ராஜ், ஜெகதீஸ்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். சந்தேகத்தின் பேரில் எஸ்எஸ்ஐ சித்ராவிடமும் விசாரணை நடந்தது.
விசாரணையில் செந்தில்குமாரை சித்ராவே கூலிப்படையை ஏவிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, எஸ்எஸ்ஐ சித்ரா, பாவக்கல்லைச் சேர்ந்த பெண் சாமியார் சரோஜா (32), கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமார் (21), ராஜபாண்டியன் (32) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படை கும்பல் தலைவன் வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காவல்துறையில் சித்ரா அளித்த வாக்குமூலத்தில், “எனது கணவர் செந்தில்குமார் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2002 இல் காவல்துறை வாகனத்தைத் திருடி விற்பனை செய்த வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 2008 இல் ஒரு காரை சொந்தமாக வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். பணியில் இருந்தபோது நானும் எனது கணவரும் சேர்ந்து ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்கினோம். இந்நிலையில், செந்தில்குமாரின் காருக்கு மாற்று ஓட்டுநராக கமல்ராஜ் அவரிடம் பணிக்குச் சேர்ந்தார். இது தொடர்பாக கமல்ராஜ் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து சென்றதில் எனக்கும் அவருக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. கணவருக்குத் தெரியாமல் நாங்கள் அடிக்கடி தனியாக சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளோம். என் கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருந்து வந்தது.
கமல்ராஜும் நானும் நெருங்கிப் பழகி வருவதை அறிந்த செந்தில்குமார் எங்களைக் கண்டித்தார். ஒருநாள் கணவர் வீட்டுக்கு வந்தபோது கமல்ராஜும் வீட்டில் இருந்தார். இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த என் கணவர், வீட்டில் இருந்த பொருட்களைக் கீழே தூக்கிப் போட்டு உடைத்தார். அப்போது கமல்ராஜுக்கும் என் கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கமல்ராஜ் அளித்த புகாரின் பேரில் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். அவர் வீட்டிற்கு வரும் போதெல்லாம் என்னை அடித்து உதைத்தார். அவரால் எனக்கு நிம்மதியே போய்விட்டது.
இந்த நிலையில், பாவக்கல்லைச் சேர்ந்த பெண் சாமியார் சரோஜாவைச் சந்தித்து என் கணவர் பற்றி கூறினேன். அவரோ, தன்னிடம் கூலிப்படை இருப்பதாகவும், 10 லட்ச ரூபாய் கொடுத்தால், இடையூறு செய்து கொண்டிருக்கும் செந்தில்குமாரின் கதையை சத்தமின்றி முடித்துவிடலாம் என்றும் யோசனை கூறினார். இதையடுத்து, என் கணவரைத் தீர்த்துக் கட்டுவதற்காக 9.60 லட்ச ரூபாயை சரோஜாவிடம் கொடுத்தேன். கூலிப்படைத் தலைவன் வெள்ளைச்சாமியிடம் நான் நீதிமன்றப் பணிக்குச் சென்றிருக்கும் நாளாகப் பார்த்து கணவனைத் தீர்த்துக் கட்டிவிடுங்கள். அப்போதுதான் என் மீது சந்தேகம் வராமல் இருக்கும் என்று கூறினேன்.
இதையடுத்து செந்தில்குமாரை தீர்த்துக்கட்ட நாள் குறித்த நாங்கள், என் மகன் ஜெகதீஸ்குமார் மூலமாக அவரை வீட்டுக்கு அழைத்தோம். அவர் வந்ததும் தயாராக இருந்த கூலிப்படையினர் அவரை அடித்துக் கொலை செய்தனர். சடலத்தை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிச்சென்று விட்டனர். வேலை முடிந்து நான் வீடு திரும்பினேன். சடலத்தை என் ஒருத்தியால் மட்டும் அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் கூலிப்படை கும்பலை மீண்டும் வீட்டுக்கு வரவழைத்து, அவர்கள் உதவியுடன் வெள்ளைச்சாமியின் காரில் சடலத்தை எடுத்துச் சென்று, அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் வீசிவிட்டு, அவரவர் வேலைக்குச் சென்றுவிட்டோம்.
காவல்துறையினருக்கு என் மீது சந்தேகம் வராமல் இருக்க, என் மகனையும் ஆண் நண்பரையும் நீதிமன்றத்தில் சரணடையும்படிச் சொன்னேன். அவர்களும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சந்தேகத்தின் பேரில் சிலருடைய செல்போன் உரையாடலை வைத்து சரோஜாவைப் பிடித்து விசாரித்துள்ளனர். அவர் நடந்த சம்பவத்தை ஒன்றுவிடாமல் ஒப்பித்துள்ளார். அதனால் தான் நாங்களும் பிடிபட்டுவிட்டோம்.” என்று கூறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.