
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன் (30), இவரது மனைவி காந்திமதி (27). கிருஷ்ணன், கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி இரவு தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையைச் சேர்ந்த கனகராஜ் மகனும் ரவுடியுமான வீரா என்கிற வீரங்கனை தலையைத் துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். அவ்வாறு தப்ப முயன்றபோது, கிருஷ்ணன் காவல்துறையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணனின் கூட்டாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கிருஷ்ணன் மனைவி காந்திமதி நேற்று முந்தைய தினம் (18.09.2021) இரவு குப்பங்குளத்தில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், காந்திமதியை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் காந்திமதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்து உடனடியாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட காந்திமதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் அரவிந்தன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. அதேசமயம், காந்திமதிக்கு வேறு ஒருவருடனும் தொடர்பு இருந்திருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்தன், காந்திமதியிடம் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அரவிந்தன், காந்திமதியின் உறவினரான சிறுவன் ஒருவன் மூலம் காந்திமதியை வரவழைத்து அச்சிறுவன் உட்பட மேலும் இரு சிறுவர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து அரவிந்தன் மற்றும் அவரது கூட்டாளிகளைக் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.