கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் செங்குந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுமார் 70 வயது மதிக்கத்தக்க கோவிந்தசாமி. இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியே வசித்து வருகின்றனர். மனைவி வசந்தாவும் கோவிந்தசாமியும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு கரோனா நோய் பாதிக்கப்பட்டு வசந்தா இறந்துவிட்டார். இதன்பிறகு கோவிந்தசாமி மட்டும் தனித்து வசித்து வந்துள்ளார். தனக்கு வயதான காலத்தில் உதவி செய்வதற்காக தன்னைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு பெண்துணை வேண்டி திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். திருமண தகவல் மையத்தைச் சேர்ந்தவர்கள், சீர்காழியைச் சேர்ந்த 49 வயது விஜயசாந்தி என்பரது செல்ஃபோன் எண்ணைக் கொடுத்து இவர் உங்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறார், ஒத்துவருமா என்பது குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கோவிந்தசாமி சீர்காழி விஜயசாந்தியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இருவரும் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு கோவிந்தசாமியைத் திருமணம் செய்து கொள்வதாக விஜயசாந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து 23.4.2021 அன்று சின்னசேலத்தில் உள்ள கோவிந்தசாமி வீட்டிற்கு விஜயசாந்தி நேரடியாக வந்தவர் அவருடன் இரண்டு நாள் தங்கி இருந்துள்ளார். அதன்பிறகு தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுக் கொண்டதாகவும் ஊருக்குச் சென்று அந்த விவாகரத்து நோட்டீஸை எடுத்துக் கொண்டு மீண்டும் வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வரவில்லை.
செல்போனில் தொடர்பு கொண்டபோதும் அவர் பேசவில்லை இந்த நிலையில் விஜயசாந்தி மீண்டும் 7.5.2021 மீண்டும் கோவிந்தசாமியைத் தேடி சின்னசேலம் வந்துள்ளார். அப்போது கோவிந்தசாமி, தனது வீட்டில் மாட்டப்பட்டிருந்த அவரது மனைவி வசந்தாவின் புகைப்படத்தில் அவரது மனைவி வசந்தா அணிந்திருந்த ஒன்பதரை பவுன் தாலிச் சரடு ஒன்றை மனைவியின் நினைவாக மாட்டியிருந்தார். அதன் மதிப்பு ரூ. 4 லட்சம் எனக் கூறப்படுகிறது. அந்த நகைகளை விஜயசாந்தி யாருக்கும் தெரியாமல் திருடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். படத்தில் மாட்டி இருந்த நகையைப் பறித்துச் சென்றதை அறிந்த கோவிந்தசாமி அவரை பல இடங்களில் தேடியுள்ளார்.
விஜயசாந்தியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போதும் எடுக்கவில்லை. இந்த நிலையில், நேற்று காலை சின்னசேலம் பேருந்து நிலையத்தில் விஜயசாந்தி சுற்றிக் கொண்டிருந்ததைத் தற்செயலாகப் பார்த்த கோவிந்தசாமியும் அவருடன் இருந்த அவரது மகளும் ஓடிச் சென்று விஜயசாந்தியை பிடித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சின்னசேலம் போலீஸார் விஜயசாந்தி மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர்.