வாழப்பாடி அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தையைக் கடத்திச் சென்ற இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கட்டுவேப்பிலைப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 11 வயதில் பெண் குழந்தையும், 7 மற்றும் 2 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன. இவர்களில் 2 வயதான கவின் என்ற ஆண் குழந்தை, ஏப். 19ம் தேதி காலை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரமாகியும் வீட்டுக்குள் வராததால் பெற்றோர் வெளியே சென்று பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் குழந்தை இருக்கும் இடம் தெரியவில்லை. இதையடுத்து செந்தில்குமார், வாழப்பாடி காவல் நிலையத்தில் குழந்தையைக் காணவில்லை என புகார் அளித்தார்.
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். செந்தில்குமாரின் பக்கத்து வீட்டில் லட்சுமி என்பவர் வசிக்கிறார். அவருடைய வீட்டில் வெள்ளாளகுண்டத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (32) என்பவரும் தங்கியிருந்தார். குழந்தை மாயமானதில் இருந்து அவரையும் காணவில்லை. அவர் மீது சந்தேகம் இருப்பதாக கவினின் பெற்றோர் கூறியிருந்தனர். அதன்பேரில், காவல்துறையினர் வெள்ளாளகுண்டத்தில் உள்ள பழனியம்மாளின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு செந்தில்குமாரின் மகன் கவின் விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், குழந்தையை மீட்டனர்.
பழனியம்மாளின் கணவர் பன்னீர்செல்வம். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பழனியம்மாள், சேலம் 5 சாலை அருகே உள்ள ஒரு திரையரங்கில் வேலை செய்து வந்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு கணவருடன் தகராறு ஏற்பட்டதால், வெள்ளாளகுண்டத்தில் உள்ள தனது தோழி லட்சுமியின் வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்த நாள்களில் அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து, அன்பாக பழகி வந்துள்ளார். குழந்தைகளும் இவரிடம் பாசமாக பழகியுள்ளன. இந்நிலையில்தான், செந்தில்குமாரின் குழந்தை கவினை, யாருக்கும் தெரியாமல் பழனியம்மாள் கடத்திச் சென்றுள்ளார்.
குழந்தையை விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் கடத்திச் சென்றாரா? இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. குழந்தை, மாயமானதாக புகார் அளித்த 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.