சென்னையில் கோயில்களுக்கு வரும் பக்தர்களிடமும், பஸ்ஸில் போகும் பயணிப்பவர்களிடம் செல்போன் மற்றும் நகைகளை திருடும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாள் அன்று செல்போன் திருடியதாக பானு என்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் மக்களை போலீஸார் கண்காணித்து வந்துள்ளனர். அப்போது மக்களோடு மக்களாக போலீஸார் மஃப்டியில் கண்காணித்தனர். அப்போது பானு என்ற பெண் கூட்டத்தில் திருடி வருவதை பார்த்த போலீஸார் அவரை கைது செய்தனர்.
பின்பு அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பானு அடிக்கடி இது போல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் திருட்டு வழக்குகளில் அடிக்கடி சிறைக்கு செல்வதும் பின்பு ஜாமீனில் வெளிவந்து திருட்டு வேலைகளில் ஈடுபடுவதும் என வாடிக்கையாக வைத்துள்ளார். கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தன்னை மறந்து கடவுளை வணங்கும் நேரத்தில் அவர்களிடம் இருந்து நகை மற்றும் செல்போன்களை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போல் கூட்டமான பேருந்துகளில் ஏறி ஆண்கள் அருகே நின்று அவர்களிடம் பேசுவது போல் திசை திருப்பி அவர்களின் பர்ஸ் மற்றும் செல்போன்களை திருடுவதில் பானு கை தேர்ந்தவர் என்கின்றனர்.