கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண்ணும், சிறுமியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பொழிந்து வரும் நிலையில், தேன்கனிக்கோட்டை ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தேன்கனிக்கோட்டை தர்கா அருகே உள்ள அரச மரத்தடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெண்கள் குழந்தைகள் என 25க்கும் மேற்பட்டோர் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான காலியிடத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் ஒன்று எதிர்பாராத விதமாக அரச மரத்தின் மீது இடிந்து விழுந்தது.
அப்பொழுது அந்த பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பொம்மைகள் விற்று வந்த நிலையில் அவர் மீது சுவர் விழுந்தது. இந்த விபத்தில் பொம்மை வியாபாரம் செய்த அமிதா பேகம் என்ற பெண்ணும், சஹானா என்ற சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியில் நடந்த இந்த உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.