சேலம் அருகே, யார் பெரியவன் என்ற போட்டியில் மாந்திரீகர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வாழக்குட்டப்பட்டி எருமைநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (39). மாந்திரீகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். அக். 26 ஆம் தேதி இரவு, வீட்டில் இருந்து கடைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மல்லூர் காவல் ஆய்வாளர் கலையரசி மற்றும் காவல்துறையினர் நிகழ்விடம் சென்று விசாரித்தனர். சடலத்தைக் கைப்பற்றி, கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட முத்துராஜ் குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஜெயக்குமார் (37) என்பவரின் குடும்பத்தினருக்கும் உள்ளூரில் எந்த குடும்பத்திற்கு செல்வாக்கு அதிகம் என்பதில் போட்டியும், அதனால் முன்விரோதமும் இருந்து வந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் ஜெயக்குமாரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், அவர்தான் ஆட்களை வைத்து முத்துராஜை தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது.
இந்தக் கொலை தொடர்பாக வேங்காம்பட்டியைச் சேர்ந்த ராஜா (28), பூவரசன் (30), கணேசன் (53) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. எருமைநாயக்கன்பாளையத்தில் மாந்திரீகர் முத்துராஜின் பேச்சுக்கு ஊர் மக்கள் கட்டுப்பட்டு வந்துள்ளனர். இதை ஆரம்பத்தில் இருந்தே ஜெயக்குமார் தரப்பினர் எதிர்த்து வந்துள்ளனர். எங்கள் குடும்பத்திற்கும் செல்வாக்கு இருக்கிறது; நாங்களும் பல பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் முடித்துக் கொடுப்போம் என முத்துராஜிடம் கூறி அடிக்கடி ஜெயக்குமார் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனாலும் பெரும்பாலான குடும்பத்தினர் முத்துராஜிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் அவர் உயிருடன் இருக்கும் வரை நம் குடும்பத்திற்கு ஊர் மக்கள் மத்தியில் மரியாதை கிடைக்காது எனக் கருதிய ஜெயக்குமார், மாந்திரீகர் முத்துராஜை போட்டுத்தள்ள திட்டம் போட்டார்.
இதுகுறித்து அவர் தனது கூட்டாளிகளான ராஜா, பூவரசன், கணேசன் ஆகியோரிடம் கூறி உதவி கேட்டார். அவர்களும் முத்துராஜை போட்டுத்தள்ள ஒப்புக்கொண்டனர். அவர்கள் போட்டு வைத்த திட்டப்படி, சம்பவத்தன்று இரவு நடு வழியில் முத்துராஜை மறித்து, இரும்புக் குழாய், உருட்டுக்கட்டை ஆகியவற்றால் சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்துள்ளனர். கொலைத் திட்டத்தை நிறைவேற்றிய கூட்டாளிகளுக்கு ஜெயக்குமார் பணம் கொடுத்து, காவல்துறை கண்களில் படாமல் தலைமறைவாக இருக்கும்படி கூறி, வெளியூருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த விவரங்களை எல்லாம் அவர்கள் காவல்துறை விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். முத்துராஜ் கொலை வழக்கு தொடர்பாக ஜெயக்குமாரின் நண்பர்களான வேங்காம்பட்டி சண்முகம் மகன் குப்புசாமி, கருவேப்பிலாங்காடு வடிவேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.