இன்றைய ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் படித்த பட்டதாரிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், நிர்வாகவியல், வழக்கறிஞர்கள் எல்லாருமே இளைஞர்கள், இளம் பெண்கள் தான்.
களத்திலிருக்கும் அவர்கள் சொல்வதோ.. டாக்டர் அப்துல் கலாமின் கனவை நினைவாக்க கடைசி காலம் இது அதனால் தான் இளைஞர்கள் களமிறங்கி இருக்கிறோம். பணத்தை நம்பி வாக்கு கேட்கவில்லை என்கிறார்கள்.
இதுவரை உள்ளாட்சி அமைப்புகள் எப்படி இருந்ததோ அதைப் பற்றி குறை சொல்லி பயனில்லை இனி எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லி வாக்கு கேட்கிறோம் என்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியத்தின் 12- வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் அப்துல் ஹக்கீம் (வயது 29) பிஇ ஏரோநாட்டிக்கல் படித்துவிட்டு, மலேசியாவில் நல்ல சம்பளத்தில் வேலை செய்தவர். தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களம் காண்கிறார்.
இதற்கு அவர் சொல்லும் காரணங்கள்... முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் இந்திய இளைஞர்களின் மனதில் நிற்கும் மாமனிதர். அவருடைய கனவு இந்தியா 2020. அந்த கனவை நினைவாக்க கிடைத்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு இந்த உள்ளாட்சித் தேர்தல். அதனால் தான் இதுவரை இல்லாத அளவில், இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் சாராத இளைஞர்கள் அதிகாக களமிறங்கி உள்ளனர்.
ஒரு நாட்டின் அடிப்படை உள்ளாட்சி தான். உள்ளாட்சி நிர்வாகம் சிறப்பாக இருந்தால் ஒன்றிய, மாவட்ட, மாநில, மத்திய நிர்வாகமும் சிறப்படையும். அதன் முதல்படி தான் இந்த தேர்தல். யாரும் யாரையும் குறை சொல்லி பயனில்லை. அதனால் நாளை செய்யப் போவதை மட்டும் சொல்லியே வாக்கு சேகரிக்கிறோம். இந்த தேர்தல் கலாம் கனவை நினைவாக்கும் தேர்தலாக பார்க்கிறோம். இதன் மூலம் உள்ளாட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொண்டாலே நாடும் வளம் பெறும் என்றார்.