தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்திற்கு மழைப்பொழிவு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்புப் படையினர் சென்றுள்ளனர். அருகில் இருக்கும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் வலியுறுத்திச் சொல்லியுள்ளார். இந்த மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர்கள் அதே மாவட்டத்திலிருந்து முகாமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதுபோக குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு இங்கிருந்து மானிட்டர் ஆபிசர்களையும் நாங்கள் அனுப்பியிருக்கிறோம்.
ஊட்டி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையும், தமிழ்நாடு அரசின் மீட்பு படையும் அங்கே தயார் நிலையில் இருக்க இன்று காலையே சென்று சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு மணிநேரமும் தமிழக முதல்வர் மழை குறித்த தகவலைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். கேரளாவில் பெய்யும் மழையின் பாதிப்பு தமிழகத்திற்கும் இருக்கும் என்ற உணர்வோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறோம்'' என்றார்.