Skip to main content

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கடையடைப்பு தீர்வாகுமா? வணிகர்கள் வேதனை!

Published on 11/09/2018 | Edited on 11/09/2018


ஆர்ப்பாட்டம், தர்ணா, மறியல், உண்ணாவிரதம் என அனைத்து வகையான அறவழி போராட்டங்களை கையாண்ட பின்னும் முடியாமல் போன பிறகும் இறுதியில் கடையடைப்பு தீர்வாகுமா என வணிகர் சங்கங்களை சேர்ந்த சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

அவர்கள் கூறுகையில், "பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தேதி, நாள், கிழமை புரிந்து கடையடைப்பு அறிவிப்பது மக்கள் நலன் விரும்பும் நல்ல அரசியல் செயல்பாடாக இருக்கும். அதைவிடுத்து எதற்கெடுத்தாலும் கடையடைப்பு என்றால் நாங்கள் வாங்கியுள்ள கடனுக்கு வட்டி தள்ளுபடி கிடைத்திடுமா? பணியாளர்கள் சம்பளம் தள்ளுபடியாகுமா? வங்கி காசோலைகள் நிறுத்தி வைக்கபடுமா? கடை வாடகை இல்லாமல் போய்விடுமா? ஏற்பாடு செய்த சுப காரியங்களை தள்ளி போட முடியுமா? அன்றாடம் காய்சிகளின் வயிறு பசி எடுக்காமல் இருந்திடுமா?

எதற்கெடுத்தாலும், கண்ணில்படும் கடைகள், வணிக நிறுவனங்கள் மட்டுமே கடையடைப்பு என்கிற அதிகாரத்திற்கு இரையாக்குவது என்ன நியாயம்? நம்மை ஆதிக்கம் செய்யும் ஆன்லைன் வர்த்தகம், டிவி சேனல்கள், டாஸ்மாக் மற்றும் பல தொழில்கள் எல்லாம் வழக்கம்போல் தடையின்றி இயங்கிக்கொண்டு தானே இருக்கிறது. ஏன் தனியார் பேருந்துகளே இயங்கத்தானே செய்தது. நாங்கள் என்னபாவம் செய்தோம்.

எல்லா அரசியல் வாதிகளுக்கும் கல்லூரி, பள்ளிகள், தொழில் நிறுவனங்கள் இருக்கிறது. அதையெல்லாம் மூட முன்வரவில்லையே ஏன்?, பெட்ரோல், டீசல் விலை உயர்வு எங்களுக்கும் பெரும் பாதிப்புதான், அதற்காக நாங்கள் கடைகளை அடைக்கிறோம். ஆனால் அதிகாரமுள்ள, வசதியானவர்கள் வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் பத்துக்கும் அதிகமான கார்கள் இருக்கும், எல்லாரிடமும் இரு சக்கர வாகனங்கள் இருக்கும் அதை ஒரு நாள் ஓட்டாமல் நடந்து போக வேண்டியது தானே?. அப்படி செய்தால் எதிர்ப்பு வலுக்கும், பிரச்சினைக்கு தீர்வு வரும், அதைவிட்டு விட்டு கடைகளை அடைப்பதால் என்ன தீர்வுகிடைத்துவிடப்போகுது.

கோயில்கள்கட்ட, கும்பாபிஷேகம் செய்ய, விழா நடத்த, கட்சி மாநாடு, கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரிடர், வெள்ளம், புயல், தீ விபத்து என எல்லாவற்றுக்கும் அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் நிவாரணம், நன்கொடை என்று வணிகர்களின் குரல்வளையை நெருக்குகின்றனர்.

இதுபோதாது என்று அரசினால் தன்னிச்சையாக பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி, தொழில் வரி, ஜிஎஸ்டி வணிக வரி, வருமான வரி, மாசுகட்டுப்பட்டு வரி, குப்பைகளை கையாள வரி என இன்னும் பலவற்றிர்கும் சம்பாதிக்க வேண்டியிருக்கு.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த போராட்டம் அவசியம்.அதை மறுப்பதற்கில்லை. அதே சமயம் வணிகர்களாகிய எங்கள் ஆதங்கத்தை அரசியல் தலைவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்." என்கிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்