தலைவாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று (பிப். 22) திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்ரோட்டில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில், 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனுள் அமைந்துள்ள விலங்கின ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 73.80 ஏக்கர் பரப்பளவில், 118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டடங்களை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை (பிப். 22) திறந்து வைத்தார். இதில் நிர்வாக அலுவலகம், கல்விசார் வளாகம், நூலக கட்டடம், விடுதி, இறைச்சி அறிவியல், பால் அறிவியல், கால்நடை பண்ணை வளாகம், விருந்தினர் மாளிகை, உணவகம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டன.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். மேலும், கால்நடை மருத்துவப் படிப்பில் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆணையையும் வழங்கினார். கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காளை மாட்டின் சிலையையும் திறந்து வைத்தார். பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைப் பட்டாவும் வழங்கினார். இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்வர், உடனடியாக சென்னைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலர் கோபால், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் அ.தி.மு.க. இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிரணி பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கலந்துகொண்டு பேசினார்.