பாஜக மாநில OBC பிரிவு பொதுச்செயலாளர் சூரியா சிவா தனியார் பேருந்தை கடத்திய வழக்கில் கண்டோன்மென்ட் போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சூரியாவின் கைதை கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.என். நகரில் அமைந்திருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தின் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்றனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கருப்பு முருகானந்தம், “திமுகவின் கைத்தடியாக காவல்துறை செயல்படுகிறது. சூர்யா கார் மீது மோதிய பேருந்துக்கு இன்சூரன்ஸ் இல்லை. சூரியா கைது மூலம் பாஜகவை மிரட்ட வேண்டும் என்பதே காவல்துறையின் நோக்கம். பொய் வழக்கு போட்ட காவல்துறை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்.