Skip to main content

குடும்பத்தையே கொன்று விடுவோம்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.வுக்கு வந்த மிரட்டல் கடிதம்!

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
குடும்பத்தையே கொன்றுவிடுவோம்: டிடிவி ஆதரவு
எம்.எல்.ஏ.வுக்கு வந்த மிரட்டல் கடிதம்!


ஈபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனில் குடும்பத்தையே கொன்றுவிடுவோம் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., கதிர்காமுவுக்கு மர்ம நபரிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
    
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தனி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டாக்டர் கதிர்காமு. இவர் ஓ.பி.எஸ்-யின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்ததின் மூலம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெ.விடம் சிபாரிசு செய்து இந்த டாக்டர் கதிர்காமுக்கு சீட் வாங்கிக் கொடுத்ததின் பேரில் பெரியகுளம் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பின் தொடர்ந்து ஓ.பி.எஸ்-யின் ஆதரவாளராகத்தான் இருந்து வந்தார். ஆனால் ஓ.பி.எஸ். சசிகலாவுக்கு எதிராக களமிறங்கி தர்மயுத்தம் போராட்டம் நடத்தியதின் மூலம் டாக்டர் கதிர்காமு
ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு இல்லாமல் சசிகலா பக்கம் சாய்ந்து விட்டார். அதை தொடர்ந்து தற்போது டிடிவி ஆதரவாளராக மாறியவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கவர்னரிடம் டிடிவியின் ஆதரவாளர்கள் 19 பேரும், முதல்வர் எடப்பாடியை மாற்ற வேண்டும் என தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் டாக்டர் கதிர்காமு எம்.எல்.ஏ.வும் எடப்பாடிக்கு எதிராக மனு கொடுத்துவிட்டு பாண்டிச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தானும் தங்கி இருக்கிறார்.

இவரது வீடு தேனி டிவிஆர் ஹவுஸ் பகுதியில் உள்ளது. இவரது வீட்டு முகவரிக்கு ஒரு மர்ம கடிதம் இன்று காலையில் வந்தது அந்த கடிதத்தில் வருகிற 12ம் தேதி செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதற்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் உள்பட உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் படுகொலை செய்துவிடுவோம்.

அதற்கு முன்னதாக 10ம் தேதியாக டிடிவி தினகரனை தூக்கிவிடுவோம் பெரியகுளம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துவிடும். எனவே எடப்பாடி, ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் பின் விளைவுகள் ஏற்படும் என்று இந்த மர்ம கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை சென்னை கிரின்வேஸ் சாலை பகுதியிலிருந்து முத்துக்குமார் என்பவர் அனுப்பியுள்ளார்.

இக்கடிதத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த கதிர்காமுவின் மகன் அசோக் இதுகுறித்து, தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம் புகார் கொடுத்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் எஸ்.பி.யும் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவிட்டு இதற்காக ஒரு குழுவையும் அமைத்து விசாரணையை எஸ்.பி. முடக்கிவிட்டு இருக்கிறார். இப்படி எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் கடிதம் வந்தது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- சக்தி
 

சார்ந்த செய்திகள்