தமிழ்நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ள நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (23/10/2021) ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அக்டோபர் 23- ஆம் தேதி அன்று காலை 11.30 மணியளவில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திரபாபு, சுகாதாரத்துறை அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில், பண்டிகைக் காலம் நெருங்குவதால் கூடுதல் தளர்வு அல்லது கட்டுப்பாடு விதிப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.